Friday, July 17, 2015

குரு மலர்தல்

குரு மலர்தல்

ஒரு பழமையான சீனக் கதை கூறுகிறேன்.
மிகப் பெரிய மடாலயம் ஒன்றில் ஒரு குரு இருந்தார். அதில் 5000 பிட்சுக்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் தியான பாதையை – தன்னை உணர்தல் – பின்பற்றினர். தன்னை உணர்தல் புத்தர் கூறிய வழிகளில் ஒன்று.
ஒருநாள் ஒரு மனிதன் அந்த மடாலயத்திற்கு வந்தான். அவன் ஒரு சீடனாக விரும்பினான். குரு அவனை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவன் கிராமத்தான், படிக்காதவன், எளிமையானவன். அதனால் குரு அவனிடம், சமையலறையில் போய் அரிசியை சுத்தம் செய்வதுதான் உன் வேலை என்றார்.
அங்கு சமையலறை மிகப் பெரியது. 5000 துறவிகளுக்கானது. இந்த ஏழை அதிகாலையில் அரிசியை சுத்தம் செய்ய ஆரம்பித்தால் இரவு வரை செய்தான். சொற்பொழிவுகளுக்கோ, பிரார்த்தனைகளுக்கோ போக அவனுக்கு நேரமில்லை.. சமய நூல்களை படிக்கவோ, ஆன்மீக விவாதங்களை கேட்கவோ அவனுக்கு நேரமில்லை. இந்த 5000 துறவிகளும் பண்டிதர்கள். அதனால் இந்த மடாலயம் நாடு முழுவதும் ஆன்மீக விவாதங்களுக்கு மிகவும் பெயர் போனது.
இருபது வருடங்கள் கடந்தன. அந்த மனிதன் இத்தனை ஆண்டுகளாக அரிசியை சுத்தம் செய்வதை தவிர வேறெதுவும் செய்யவில்லை. அவன் வருடங்களை கணக்கிடுவதை மறந்துவிட்டான். என்ன பயன் அவன் நாட்களை, தேதிகளை என யாவற்றையும் மறந்தான். இறுதியில் அவன் தனது பெயரைக் கூட மறந்துவிட்டான். இருபது வருடங்களாக யாரும் அதை உபயோகிக்கவில்லை. யாரும் அவனை பெயர் சொல்லிக் கூப்பிடவில்லை. அது அவனது பெயர்தானா என்பதுகூட அவனுக்கு சந்தேகமாகிவிட்டது. இருபது வருடங்களாக அவன் அரிசியை சுத்தம் செய்யும் ஒரே ஒரு சிறிய விஷயத்தை மட்டுமே தொடர்ந்து செய்து வந்தான். காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்க போகும் வரை அதை மட்டுமே செய்தான்.
குரு தான் இறக்கும் நேரம் வந்துவிட்டதை அறிவித்தார். அவர் தனது வாரிசை தேர்ந்தெடுக்க விரும்பினார். அதற்காக அவர் ஒரு அறிவிப்பு செய்தார். தன்னை உணர்ந்து விட்டதாக யாராவது நினைத்தால் அவர் உண்மையை உணர்ந்த விதமாக ஏதாவது ஒரு வாக்கியத்தை எனது குடிலின் சுவற்றில் எழுத வேண்டும் எனக் கூறினார்.
அந்த மடத்தில் உள்ள துறவிகளிலேயே தன்னை மிகச் சிறந்த பண்டிதராக நினைத்த ஒருவர் முயற்சித்தார். ஆனால் அவர் அந்த குடிலின் சுவரில் எழுதிய வாசகம் அவருடைய சொந்த அனுபவம் அல்ல. அது அவருக்கும் தெரியும். எப்படி அது அவருக்குத் தெரியாமல் போகும் அவர் நூல்களிலிருந்து எடுத்ததுதான் அது. இந்த வயதான குருவை ஏமாற்றுவது மிகவும் கடினம். சொந்த அனுபவத்திலிருந்து வந்தது அல்ல இது என அவர் எளிதாக கண்டுபிடித்துவிடுவார் என பயந்தார். அதனால் அவர் தனது பெயரை எழுதவில்லை.
காலையில் வயதான குரு வந்து பார்த்துவிட்டு வேலையாளை கூப்பிட்டு அங்கு எழுதியிருந்ததை அழித்துவிடும்படி கூறு, எனது சுவற்றை பாழடித்த முட்டாள் யாரென்று கண்டுபிடி. என்றார். அந்த பண்டிதர் குரு இது ஒரு சிறப்பான உணர்தல் என பாராட்டினால் பின் நான்தான் இதை எழுதினேன் எனக் கூறலாம். இல்லாவிடில் மௌனமாக இருந்து விடலாம். யாருக்குத் தெரியும். 5000 பேரில் யார் வேண்டுமானாலும் இப்படி எழுதக் கூடும் என நினைத்ததால் அவர் அதில் கையொப்பமிடவில்லை.
கிட்டத்தட்ட பன்னிரண்டு பண்டிதர்கள் முயற்சித்தனர். ஆனால் யாருக்கும் தனது பெயரை எழுத தைரியம் வரவில்லை. குரு எல்லா நாளும் அழித்து வந்தார். அவர், தன்னை உணரும் பக்குவம் உங்களில் யாருக்கும் வரவில்லை. தான் என்ற பெயரில் எல்லோரும் நானைத் தான் வளர்த்துக் கொண்டுள்ளீர்கள். நான் உங்களுக்கு திரும்ப திரும்பக் கூறி வந்திருக்கிறேன். ஆனால் நான் என்பது ஒரு சுகம், அதிலும் ஆன்மீக நான் என்பது மற்ற எல்லா வகையான நான்களை விட மிகவும் சுகமானது. அதனால் அடுத்த தலைமை யார் என நானே கண்டு பிடிக்கிறேன். என்றார்.
ஒருநாள் இரவு வயதான குரு இருபது வருடங்களுக்கு முன் வந்த மனிதனிடம் சென்றார். இருபது வருடங்களாக அவன் அரிசியை சுத்தம் செய்வதைத் தவிர வேறெதுவும் செய்யாததால் குருவை அவன் பார்க்கவே இல்லை. குரு அவனை எழுப்பினார். அந்த மனிதன் குருவைப் பார்த்து யார் நீ எனக் கேட்டான். ஏனெனில் இருபது வருடங்களுக்கு முன் தீட்சையளித்த போது சில நிமிடங்கள் தான் பார்த்தான். அதனால் என் தூக்கத்தைக் கெடுத்ததன் காரணம் என்ன எனக் கேட்டான். குரு, நான்தான் உன் குரு. மறந்து விட்டாயா உனக்கு உன் பெயராவது நினைவில் இருக்கிறதா எனக் கேட்டார்.
அந்த மனிதன் அது சிரமம். ஏனெனில் நீங்கள் எனக்கு கொடுத்த வேலையை செய்ய பெயர், புகழ், படிப்பு, பதவி, பட்டம் என எதுவும் தேவையில்லை. இது மிக எளிமையான வேலை. எனவே நான் எல்லாவற்றையும் மறந்து விட முடிகிறது. இதுதான் எனது பெயர் என என்னால் உறுதியாக கூற முடியவில்லை. சில பெயர்கள் எனது நினைவுக்கு வருகிறது. ஆனால் அதில் எது என்னுடையது என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் உங்களுக்கு மிகவும் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். எனக் கூறி அவர் குருவின் பாதத்தில் விழுந்தார்.
தயவுசெய்து எனது வேலையை மாற்றி விடாதீர்கள். நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன். ஆனால் நான் எல்லாவற்றையும் அடைந்து விட்டேன். நான் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு நிலை இப்போது எனக்கு கிடைத்து விட்டது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு மௌனத்தை நான் அடைந்து விட்டேன். சில சமயங்களில் நான் பேரானந்த நிலையை உணர்கிறேன். அந்த தருணங்களில் இறந்தால் கூட நான் வருத்தம் கொள்ள மாட்டேன், வாழ்க்கை என்னை வஞ்சித்துவிட்டது எனக் கூற மாட்டேன். என் தகுதியை விட அதிகமாகத்தான் அது எனக்கு அளித்திருக்கிறது. எனது வேலையை மாற்றி விடாதீர்கள். நான் அதை நன்றாகத் தான் செய்திருக்கிறேன். யாராவது எனது வேலையை பற்றி புகார் கூறினார்களா என்றார்.
குரு, இல்லை, யாரும் புகார் கூற வில்லை. ஆனால் உனது வேலை மாறி விட்டது, ஏனெனில் உன்னைத்தான் எனக்கு அடுத்த தலைமையாக தேர்ந்தெடுத்திருக்கிறேன். என்றார்.
அந்த மனிதன், நான் அரிசி சுத்தம் செய்பவன். குருவாக இருப்பதைப் பற்றியோ, சீடர்களைப் பற்றியோ எனக்கு எதுவுமே தெரியாதே. எனக்கு எதுவும் தெரியாது என்னை மன்னித்து விடுங்கள். நான் தலையை பதவியை ஏற்க வில்லை. ஏனெனில் அவ்வளவு பெரிய பதவியை சமாளிக்க என்னால் முடியாது. எனக்கு அரிசி சுத்தம் செய்ய மட்டுமே தெரியும். என்றான்.
குரு, மற்றவர்கள் அடைய முயற்சி செய்து தோல்வியுற்றனர். அதில் நீ வெற்றி பெற்று விட்டாய். நீ முயற்சி செய்யாததால் நீ அடைந்து விட்டாய். நீ இந்த சிறிய விஷயத்தை மட்டுமே செய்து கொண்டிருந்தாய். அதில் நினைவுகளுக்கோ, உணர்ச்சிகளுக்கோ, கோபத்துக்கோ, போராட்டத்துக்கோ, ஒப்பிடுதலுக்கோ, லட்சியங்களுக்கோ, இடமில்லை. அதனால் மெதுமெதுவாக உனது அகந்தை அழிந்து விட்டது. அந்த அகந்தையுடன் உனது பெயரும் அழிந்தது. நீ பெயருடன் பிறக்கவில்லை. அகந்தைதான் பெயருடன் இருந்தது. அதுதான் அகந்தையின் ஆரம்பம்.
ஏனெனில் அந்த அகந்தை தான் உன்னை என்னிடம் கொண்டு வந்தது. அகந்தை அழிந்ததின் விளைவாக நீ உனது குருவான என்னைக் கூட மறந்து விட்டாய். அந்த வினாடி வரை ஆன்மீக லட்சியபாதையில் இருந்தாய். இப்போது நீ அடைந்து விட்டாய். நீதான் சரியானவன். அதனால் எப்போதும் குரு அவரது அடுத்த வாரிசுக்கு கொடுக்கும் இந்த அங்கி, இந்த தொப்பி, இந்த வாள் ஆகிய எல்லாவற்றையும் பெற்றுக் கொள். ஆனால் ஒரு விஷயம் நினைவில் கொள். இவற்றை பெற்றுக் கொண்டு இந்த மடத்தை விட்டு எவ்வளவு தூரம் போக முடியுமோ, அவ்வளவு தூரம் ஓடிப் போய்விடு. ஏனெனில் உனது உயிர் அபாயத்தில் உள்ளது. இந்த அகந்தை பிடித்த 5000 பேரும் உன்னைக் கொன்று விடுவார்கள். நீ மிகவும் எளிமையாக, வெகுளியாக, இருப்பதால் அவர்கள் உன்னிடம் வந்து அங்கி, தொப்பி, வாள் இவற்றை கேட்பார்கள். நீயும் கொடுத்துவிடுவாய். நீ இவற்றை எடுத்துக் கொண்டு எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் மலை ஏறி போய்விடு.
விரைவில் எப்படி மலர் மலர்ந்தால் தேனீக்கள் தேடி வருமோ அதுபோல மக்கள் உன்னை வந்தடைவர். நீ மலர்ந்து விட்டாய். நீ சீடர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. வெகு தொலைவான ஒரு இடத்தில் வெறுமனே அமைதியாக இருந்தால் போதும், மக்கள் உன்னைத் தேடி வருவர். நீ என்ன செய்தாயோ, அதையே மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடு. என்றார்.
ஆனால் என்ற அந்த மனிதன் நான் எந்த பாடத்தையும் படிக்கவில்லை. எப்படி சொல்லிக் கொடுப்பது என எனக்குத் தெரியாதே. என்றான்.
குரு, சிறிய விஷயங்களை அமைதியாக, மௌனமாக, எந்த குறிக்கோளும் இல்லாமல். இந்த உலகத்திலோ, அடுத்த உலகத்திலோ எதையாவது பெற வேண்டும் என்ற ஆசையின்றி, செய்யச் சொல். அப்போதுதான் வெகுளித்தனமானவனாக, ஒரு குழந்தையை போல மாற முடியும். அந்த வெகுளித்தனம்தான் உண்மையான ஆன்மீகம் என்பதை சொல்லிக் கொடு. என்றார்.

No comments:

Post a Comment

கண் திருஷ்டி போக்கும் பைரவர் மூல மந்திரம் :

கண் திருஷ்டி  போக்கும் பைரவர் மூல மந்திரம் : மூல மந்திரம்   ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம்  ஹரௌம் க்ஷம் க்ஷத்ரபாலாய நம  இந்த மூ...