உணவு
...உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் ...
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும், ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.
உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.
உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்கக்கூடாது.
வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.
காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.
சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.
சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.
நின்று கொண்டு சாப்பிக் கூடாது.
அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.
சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.
இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.
ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.
நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.
உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.
அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.
தனக்குத்தானே சோறிட்டுக் கொள்வது ஆயுளைக் குறைக்கும்.
இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.
சாப்பிட்டால் லட்சுமி அவ்வீட்டில் வாசம் செய்யமாட்டாள். பால்சோறு சாப்பிடலாம்.
நெய்யில் அடியில் தங்கியிருக்கும் கசடைப் பயன்படுத்தக் கூடாது. வெண்ணெயில் உள்ள அழுக்குகளின் திரட்சி இது. எளிதில் ஜீரணமாகாது. இதை உட்கொண்டால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, கல்லீரல் மந்தம் உள்ளவர்களுக்குக் காமாலை நோய் ஆகியவை ஏற்படும். எனவே இதைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.
வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.
ோறு, நெய், உப்பு ஆகியவற்றை கையால் எடுக்கக்கூடாது. கரண்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.
உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.
வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.
கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.
புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.
வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.
கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள் வளரும். மேற்கு நோக்கினால் பொருள் சேரும். தெற்கு நோக்கினால் புகழ் வளரும். வடக்கு மட்டும் கூடாது. நோய் வரும்.
உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.
...
சில உணவுகளை உண்ணாமல் தவிர்க்க வேண்டும் என ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
அவை ..
கொல்லைப்புற வழியாகக் கொண்டு வந்த சோறு,
வரகு முதலான தான்யங்களினால் அமைந்தது,
வாயினின்று விழுந்த பொருளுடன் சம்பந்தமுடையது,
வாயில் போட்ட கவளத்தில் மீந்திருப்பது,
கெட்டவர்கள் கண்ணால் பார்த்த உணவு,
தீய்ந்து போனது,
துணி, தும்மல் ஆகியவை பட்டது,
நாய் முதலிய பிராணிகளால் முகர்ந்தது, உண்டது,
ஏகாதசி போன்ற உண்ணாநோன்பு விரதகாலத்தில் சமைத்தது ஆகிய உண்டிகள் தள்ளப்பட வேண்டியவை.
மேலும், பிராணிகள், மனிதர், முகர்ந்து பார்த்த உணவு, பிணியாளர்கள், ரோகமுடையவர்கள் ஸ்பர்சித்தது, விருப்பமில்லாமல் இன்முகமாக அளிக்கப்பட்டது, ஈ, புழு, நூல், முடி, நகம் போன்றவை விழுந்தது, ஸந்யாசிகள் கொடுத்தது, அவர்கள் பாத்திரத்திலிட்டது, மனிதர், எலி, கோழி, காக்கை, பூனை ஆகியன வாய்பட்ட உணவும் விலக்கப்பட வேண்டியவை.
வாயில்லா வாயிலினால் வந்தசோறும்,
வரகு முதலாகா தென்றுரைத்த சோறும்
வாயினின்றும் விழுமவைதான் பட்டசோறும்
வாய்க் கொண்ட கவளத்தின் மிகுந்த சோறும்,
தீயவர்கள் படுஞ்சோறும் தீதற் சோறும்
சீரையுரை தும்மலிவை பட்டசோறும்
நாய் முதலானவை பார்க்குந் தீண்டும்சோறு
நாள் தூய்தல்லாச் சோறும் நண்ணாச் சோறே.
...
உணவு, ஒரு மனிதனுக்கு இன்றி அமையாதது. உடலுள் தங்கும் உயிரை அது தங்க வேண்டிய வரை உடலை பேணி காக்க உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் கூட நாம் எத்தனை கவனமாக இருந்தால், அந்த இருப்பே நம்மை பல நிலைகளை கடக்க உதவி புரியும் என்று ஆணித்தரமாக கூறுகின்றனர். சித்தர்களில் அகத்தியர், உணவை மருந்தாக பாவித்து மருத்துவ முறையை நடை முறை படுத்தினார். இனி, உண்ணும் முறையில் நாம் என்னென்ன விதிகளை கடைபிடிக்கவேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.
அசைவம் அல்லது புலால் என்கிற உணவு முறையை அனைவரும் ஒதுக்க வேண்டும் என்கின்றனர். அசைவம் உண்பவருக்கு தாது சுத்தி உண்டாகாது என்கின்றனர் சித்தர்கள், அதனால் அவர்களால் ஆன்மீகத்திலோ, சித்த முறைகளிலோ மேல் படிக்கு உயரமுடியாது என்று திண்ணமாக கூறுகிறார். யோசிக்கவும்.அசைவம் உண்டவர், சமைப்பவர் கையிலிருந்து எதை வாங்கி சாப்பிட்டாலும், அவரிடம் உள்ள தோஷம் உண்பவருக்கும் வரும்.எந்த தெய்வமும் ஒரு உயிரை பலி கொடு என்று கேட்பதில்லை. பெரியவர்கள் அறுக்க சொன்னது ஒன்று, நம்மவர் அறுப்பது வேறொன்று. இதற்கும் மேல் ஒருபடி சென்று "கொன்றால் பாபம் தின்றால் தீரும்" என்று ஒரு மொழியை சொல்லி, கொன்றதை தானும், தன்னுடன் இருப்பவர்களுடன் பகிர்ந்து உண்பது என்பது, "பிரம்ம ஹத்தி" தோஷத்தை தானும் ஏற்றுக்கொண்டு, பிறரையும் சுமக்க வைப்பது போன்றது.
உண்ண அமர்ந்த உடன், இறைவனை த்யானித்து "நீயே என்னுள் இருந்து இந்த உணவை உனக்கு சமர்ப்பணம் செய்ததாக ஏற்றுக்கொள். இந்த உணவு நல்ல சக்தியை, நல்ல எண்ணங்களை எனக்குள் தரட்டும். உண்பது இவ்வுடலாயினும் இதன் தாத்பர்யம் உன்னை வந்து அடையட்டும்" என்று வேண்டிக் கொண்டு உண்ணவேண்டும்.
உணவை சமைப்பவர், சமைக்கும் போது சுத்தத்துடன், தூய எண்ணங்களுடன் இருக்க வேண்டும். அவரது தூய நிலையும், எண்ணமும் அந்த உணவு வழியாக அதை சாப்பிடுபவருக்குள் சென்று அவரது மன நிலையை சமன் செய்யும். இதற்காக, சமைப்பவர் தனக்கு தெரிந்த மந்திர உச்சாடனங்களை, மூல மந்திரங்களை மனதுள் சொல்லிக்கொண்டே சமைக்கலாம். ஒருவரது மன நிலையை உணவு நிறைய அளவுக்கு மாற்றி விடும் என்று உணர்ந்தே, நம் முன்னோர்கள் வீட்டை விட்டு வெளியே சாப்பிடுவதை தவிர்த்து வந்தார்கள். "ஆசாரம்" என்று இதை அழைத்தனர். இறைவனை சார்ந்தது நின்று விலக்க வேண்டியதை விலக்கி நிற்பது என்று பொருள். இது ஒரு வர்ணத்தாருக்கு மட்டும் அல்லாமல் எல்லோருக்கும் உரியது.
நல்ல எண்ணங்களுடன், அமைதியாக இருந்து, உண்ணும் உணவில் கவனம் வைத்து உண்ண வேண்டும்.
உண்ணும் உணவு வெளியே சிதறாமல் கவனமாக உண்ண வேண்டும். சிந்திய உணவை நீரினால் சுத்தம் செய்து பின்னர் உண்ணலாம்.
இறைத்யானத்துக்குப் பின், உண்ணும் முன் ஒரு பிடி உணவை வலது கையில் வைத்துக்கொண்டு, சித்தர்களையும், மகான்களையும் த்யானித்து "இது உங்களுக்கான அவிர்பாகம். இதை எந்த உயிர் சாப்பிட்டாலும், இதன் தாத்பர்யம் தங்களை வந்து சேரட்டும்" என வேண்டிக்கொண்டு, அருகில் யாரேனும் இருந்தால் அவர்களிடம் கொடுத்து வெளியே எங்கேனும் வைத்திட, அதை சாப்பிடுவது அணிலோ,, காகமோ எதுவோ ஆயினும், அந்த உணவின் தாத்பர்யம் என்பது பெரியவர்களை சென்று சேரும். இதுவும் ஒரு வகை குருபூசை.
உண்ணும் நேரத்தில் நீர் அருந்த வேண்டி வந்தால், இடது கையால் அருந்த வேண்டி வரும். அப்போது வலது கையை சாப்பிடும் தட்டில்/இலையில் வைத்துக் கொண்டு நீர் அருந்தலாம். விதி விலக்கு உண்டு. மற்ற நேரத்தில் வலது கையால் தான் நீர் அருந்தவேண்டும்.
உணவு அருந்தும் சூழ்நிலை சுத்தமாக, அசுத்தமாகாமல் இருக்க வேண்டும். உணவு அருந்துவதினால், நமக்குள் ஒரு யாகம் நடக்கிறது என்பதை உணரவேண்டும். அதை "கர்ம தகனம் என்பார்கள் பெரியவர்கள். ஆதலால், ஆத்மா அக்னி வேள்விக்கு என்று படைக்கப்பட்ட எதையும் (இலையில்/தட்டில் பரிமாறப்பட்ட) வீணாக்கக்கூடாது. உண்ண விரும்புவதை மட்டும் பரிமாற வேண்டுங்கள்.
பசுவுக்கு ஒரு பிடி புல்லோ, த்வாதசி திதி அன்று அகத்தி கீரையோ, ஒரு கை உணவோ கொடுப்பதினால், நிறைய தோஷங்களிலிருந்து விமோசனம் பெறலாம். பித்ரு தோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து பசுவின் பசியை ஆற்றினால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் காண்பர்.
நாம் உண்ணும் உணவில் பயன்படுத்தும் "அரிசி"யின் மறுபெயர் "அரிசிவா" என்கின்றனர் சித்தர்கள். அது, நாராயணர், சிவபெருமானின் ரூபம். ஆதலால், அதனை மிகவும் மதிப்பவருக்கு அவர் அருள் சேரும். எந்த நேரத்திலும் அலட்ச்சியம் கூடாது.
சாப்பிட உட்கார்ந்தபின், உணவை உண்டு முடிக்கும் வரை எந்த காரணம் கொண்டும் எழுந்திருக்கக்கூடாது. அப்படி செய்வது, அன்ன த்வேஷம் என்கிற தோஷத்தை கொண்டு தரும். அன்ன த்வேஷம் ஒருவருக்கு வந்தால், நல்ல காலத்தில் எல்லாம் நிறைவாக இருக்க, ஒரு வாய் உணவு கூட சாப்பிட முடியாமல் போய்விடும்.
வெளிச்சம் இல்லாத பொது உணவு உண்ணக்கூடாது. சாப்பிடும் போது மின்சாரம் தடைபட்டு வெளிச்சம் போய்விட்டால், விளக்கேற்றி வைத்து அந்த வெளிச்சத்தில் சாப்பிட வேண்டும்.பூசை அறையிலோ, வீட்டிலோ விளக்கு எரிந்து கொண்டிருந்தால், யாரேனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் விளக்கை நிறுத்தக் கூடாது.
உண்ணும் உணவை ஒரு போதும் கைக்குள் உருட்டி உண்ணக்கூடாது. உருட்டி வைப்பது "பிண்டம்" எனப்படும். இது பித்ரு சடங்கில் உணவை வைக்கும் முறை. உருட்டி உண்டால் நமக்கு நாமே பிண்டம் போட்டுக்கொள்வது போல் ஆகிவிடும். அது அன்னத்தை அவமதிப்பதாகவும் ஆகிவிடும்.
பெண்கள் உணவை பரிமாறும் போது தலை முடியை முடிந்து கொணட பின்னர்தான் பரிமாற வேண்டும். தலை முடியை விரித்துப் போட்டுக்கொண்டு உணவு பரிமாறக் கூடாது. நெற்றியில் திலகமும் இருக்கவேண்டும்.
உணவு உண்ட பின் குளிக்கக் கூடாது. அப்படி தவிர்க்க முடியவில்லை என்றால், உண்டு ஒரு மணி நேரம் கழிந்து தான் குளிக்கவேண்டும். ஒருவர் உண்ட உணவு ஒரு மணி நேரத்துக்குள் ஜீரண நிலைக்கு சென்று விடும். கழிவுகள் அகற்றப்பட்டுவிடும். குளிப்பதினால் உடல் சூடு தணிக்கப்படுவதால், ஜீரணத்தை பாதிக்கும்.
ஒரு மணிநேரத்துக்கு பின் இரைப்பையில் தாங்கும் உணவு விஷமாக மாறி உடலை வருத்தும். அசைவ உணவு ஒரு மணி நேரத்துக்குள் ஜீரணிக்கப்படமாட்டா. ஆதலால், அசைவ உணவை உண்டு நமக்கு நாமே விஷம் ஏற்றிக் கொள்வதை தவிர்க்கவேண்டும். யோசிக்கவும்.
நவ கிரகங்கள் ஒருவரை, அவருக்கு எது மிக பிடிக்குமோ அந்த வழியில் தூண்டுதலை கொடுத்து, உள்ளே நுழைந்து தாங்கள் செய்ய வேண்டிய "வேலையை" செய்யும். அதில் ஒன்று உணவு.ஆதலால் எந்த குறிப்பிட்ட உணவின் மீதும் ஆசை/பற்றுதலை வைக்காமல் எது வந்து சேருகிறதோ அதை இறை சிந்தனையுடன் உண்பதினால், இவர்கள் பிடியிலிருந்து தப்பி விடலாம்.
உணவு தானம் எத்தனையோ தோஷங்களுக்கு சிறந்த பரிகாரம். ஒருவனுக்குள் நடக்கும் கர்ம யாகத்துக்கு உதவி புரிவதினால், நம் கர்மாவும் அதனுடன் கழிந்து போகும். அதனால் தான் கலியுகத்தில் "அன்னத்துக்கு" மிஞ்சின தர்மம் இங்கு இல்லை என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.
பிறர் உண்ணும் இடத்தருகில் நின்று தும்முவது, துப்புவது போன்ற அசுத்தங்களை பிறர் செய்யக்கூடாது.
உண்ணும் உணவால் உடல் மேன்மை பெற பெரியவர்கள் அளவாக உண்ணச்சொன்னார்கள். எப்படி? உண்ணும் முன் சுத்தமான நீரால் காலை கழுவிவிட்டு அமர வேண்டும். காலில் உள்ள நீர் உலந்ததும் சாப்பிடுவதை நிறுத்திவிடவேண்டும். இது தேவைக்கு சாப்பிடுவதை தெரிந்துகொள்ள ஒரு அளவுகோல்.
மிளகு ஒரு நல்ல மருந்து. தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்ள மறவாதீர்கள். இது எந்த விஷத்தையும் அறுத்துவிடும். பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்கிற மொழி இதன் மகத்துவத்தால் வந்தது.
ஜீரகம் செரிமானத்துக்கு மிகவே உதவிபுரியும். அசைவம் சாப்பிட்டவர்கள் உடல் சுத்தி பெற 48 நாட்களுக்கு சீரகத்தை தண்ணீரில் இட்டு கொதிக்கவைத்து அருந்தி வந்தால் தாது சுத்தி ஏற்படும்.
உணவில் கடுகை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்துக்கொள்ளுங்கள். இது மிக வீரியமான ஒன்று. பின்னர் ஏதேனும் வியாதிக்காக மருந்து சாப்பிட்டால் மருந்து வேலை செய்யாது.
வாரத்தில் ஒரு நாள் உப்பை தவிர்த்து (இரு வேளையேனும்) விரதமிருங்கள். வைத்தியச் சிலவை நிறைய அளவுக்கு தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment